Skip to content
BibleKenya

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு

சங்கீதம் 111

அல்லேலூயா,

நீதிமான்களின் கூட்டத்திலும் சபையிலும்

நான் முழு இருதயத்தோடும் யெகோவாவைப் புகழ்வேன்.

யெகோவாவின் செயல்கள் மகத்தானவை;

அவைகளால் மகிழ்ச்சியடையும் எல்லோராலும் அவை சிந்திக்கப்படுகின்றன.

அவருடைய செயல்கள் மகிமையும், மகத்துவமுமானவை;

அவருடைய நீதி என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறது.

அவர் தமது அதிசய செயல்களை நமது நினைவை விட்டு விலகாதபடிச் செய்திருக்கிறார்;

யெகோவா கிருபையும், கருணையும் உள்ளவராய் இருக்கிறார்.

அவர் தமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு உணவு கொடுக்கிறார்;

அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் வைத்திருக்கிறார்.

அவர் பிற நாடுகளைத் தம் மக்களுக்குக் கொடுத்து,

தமது வல்லமையை அவர்களுக்குக் காண்பித்திருக்கிறார்.

அவருடைய கரங்களின் செயல்கள் உண்மையும் நீதியுமானவை;

அவருடைய ஒழுங்குவிதிகள் அனைத்தும் நம்பத்தகுந்தவை.

அவை என்றென்றும் உறுதியானவை;

உண்மையுடனும், நேர்மையுடனும் கொடுக்கப்பட்டவை.

அவர் தமது மக்களுக்கு மீட்பைக் கொடுத்தார்;

அவர் தம் உடன்படிக்கையை என்றென்றுமாய் நியமித்திருக்கிறார்;

பரிசுத்தமும் மற்றும் பயபக்தி என்பது அவருடைய பெயராயிருக்கிறது.

யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்;

அவருடைய ஒழுங்குவிதிகளைப் பின்பற்றும் அனைவருக்கும் நற்புத்தியுண்டு.

நித்தியமான துதி அவருக்கே உரியது.

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு. Copyright © 2005, 2020, 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.