Skip to content
BibleKenya

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

சங் 55

தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.

தேவனே, என்னுடைய ஜெபத்தைக் கேட்டருளும்;

என்னுடைய விண்ணப்பத்திற்கு மறைந்துகொள்ளாதிரும்.

எனக்குச் செவிகொடுத்து, பதில் அருளிச்செய்யும்;

எதிரியினுடைய கூக்குரலினிமித்தமும்,

துன்மார்க்கர்கள் செய்யும் பிரச்சனைகளினிமித்தமும் என்னுடைய தியானத்தில் முறையிடுகிறேன்.

அவர்கள் என்மேல் பழிசுமத்தி, கோபங்கொண்டு,

என்னைப் பகைக்கிறார்கள்.

என்னுடைய இருதயம் எனக்குள் வேதனைப்படுகிறது;

மரணபயம் என்மேல் விழுந்தது.

பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது; திகில் என்னை மூடியது.

அப்பொழுது நான்: ஆ, எனக்குப் புறாவைப்போல் இறக்கைகள் இருந்தால்,

நான் பறந்துபோய் இளைப்பாறுவேன்.

நான் தூரத்தில் அலைந்து திரிந்து வனாந்திரத்தில் தங்கியிருப்பேன். (சேலா)

பெருங்காற்றுக்கும் புயலுக்கும் தப்ப விரைந்து செல்வேன் என்றேன்.

ஆண்டவரே, அவர்களை அழித்து, அவர்கள் மொழியை பிரிந்துபோகச்செய்யும்;

கொடுமையையும் சண்டையையும் நகரத்திலே கண்டேன்;

அவைகள் இரவும்பகலும் அதின் மதில்கள்மேல் சுற்றித்திரிகிறது;

அக்கிரமமும் வாதையும் அதின் நடுவில் இருக்கிறது;

கேடுபாடுகள் அதின் நடுவில் இருக்கிறது;

கொடுமையும் கபடும் அதின் வீதியைவிட்டு விலகிப்போகிறதில்லை.

என்னைக் கடிந்துகொண்டவன் எதிரி அல்ல, அப்படியிருந்தால் சகிப்பேன்;

எனக்கு விரோதமாகப் பெருமை பாராட்டினவன் என்னுடைய பகைஞன் அல்ல,

அப்படியிருந்தால் அவனுக்கு மறைந்திருப்பேன்.

எனக்குச் சமமான மனிதனும், என்னுடைய வழிகாட்டியும், என்னுடைய தோழனுமாகிய நீயே அவன்.

நாம் ஒன்றாக, இன்பமான ஆலோசனைசெய்து,

கூட்டத்தோடு தேவாலயத்திற்குப் போனோம்.

மரணம் அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக;

அவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்குவார்களாக;

அவர்கள் தங்குமிடங்களிலும் அவர்கள் உள்ளத்திலும் தீங்கு இருக்கிறது.

நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்;

யெகோவா என்னை காப்பாற்றுவார்.

காலை மாலை மத்தியான வேளைகளிலும் நான் தியானம்செய்து முறையிடுவேன்;

அவர் என்னுடைய சத்தத்தைக் கேட்பார்.

திரள் கூட்டமாகக் கூடி என்னோடு எதிர்த்தார்கள்;

அவரோ எனக்கு ஏற்பட்ட போரை நீக்கி,

என்னுடைய ஆத்துமாவைச் சமாதானத்துடன் மீட்டுவிட்டார்.

ஆரம்பம்முதலாக இருக்கிற தேவன் கேட்டு, அவர்களுக்குப் பதிலளிப்பார்;

அவர்களுக்கு மாறுதல்கள் ஏற்படாததினால், அவர்கள் தேவனுக்குப் பயப்படாமற்போகிறார்கள். (சேலா)

அவன் தன்னோடு சமாதானமாக இருந்தவர்களுக்கு விரோதமாகத்

தன்னுடைய கையை நீட்டி

தன்னுடைய உடன்படிக்கையை மீறி நடந்தான்.

அவன் வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள்,

அவனுடைய இருதயமோ யுத்தம்;

அவனுடைய வார்த்தைகள் எண்ணெயிலும் மிருதுவானவைகள்.

ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள்.

யெகோவாமேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்;

நீதிமானை ஒருபோதும் தள்ளாடவிடமாட்டார்.

தேவனே, நீர் அவர்களை அழிவின் குழியில் இறங்கச்செய்வீர்;

இரத்தப்பிரியர்களும் சூதுள்ள மனிதர்களும் தங்களுடைய ஆயுளின் நாட்களில் பாதிவரைகூட பிழைத்திருக்கமாட்டார்கள்;

நானோ உம்மை நம்பியிருக்கிறேன்.

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ். Copyright © 2017, 2019 Bridge Connectivity Solutions. Licensed under CC BY-SA 4.0. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.