Skip to content
BibleKenya

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு

சங்கீதம் 77

பாடகர் குழுத் தலைவன் எதுத்தூனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் சங்கீதம்.

நான் உதவிக்காக இறைவனை நோக்கி அழுதேன்;

எனக்குச் செவிகொடுக்கும்படியாக நான் இறைவனை நோக்கி அழுதேன்.

நான் துன்பத்தில் இருந்தபோது ஆண்டவரைத் தேடினேன்;

இரவில் என் கைகளைத் தளராமல் உயர்த்தினேன்,

என் ஆத்துமாவோ ஆறுதலடைய மறுத்தது.

இறைவனே, உம்மை நான் நினைவுகூர்ந்தேன், நான் புலம்பினேன்;

நான் தியானித்தேன், என் ஆவியோ சோர்ந்துபோயிற்று.

நீர் என் கண்களை மூடாதபடி தடுத்தீர்;

நான் பேசமுடியாதபடி மிகவும் கஷ்டப்பட்டேன்.

முந்தின நாட்களையும்,

கடந்துபோன வருடங்களைப்பற்றியும் நான் நினைத்தேன்;

நான் இரவில் என் பாடல்களை நினைவுகூர்ந்தேன்.

என் இருதயம் தியானித்தது, என் ஆவியோ இப்படி விசாரணை செய்தது:

“யெகோவா என்றென்றும் புறக்கணிப்பாரோ?

அவர் மீண்டும் ஒருபோதும் தயவு காண்பிக்கமாட்டாரோ?

அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் ஒழிந்துபோயிற்றோ?

அவருடைய வாக்குத்தத்தம் தலைமுறை தலைமுறைக்கும் அற்றுப்போயிற்றோ?

இறைவன் தயைசெய்ய மறந்துவிட்டாரோ?

அவர் தமது கோபத்தில் இரக்கங்காட்ட மறுத்துவிட்டாரோ?”

அப்பொழுது நான்: “மகா உன்னதமானவரின் வலதுகரம்,

எனக்காக செயலாற்றுகிறது,

யெகோவாவின் செயல்களை நான் நினைவுகூருவேன்;

ஆம், முற்காலத்தில் நீர் செய்த அற்புதங்களை நான் நினைவிற்கொள்வேன்.

உமது செய்கைகளையெல்லாம் நான் தியானிப்பேன்;

உமது வல்லமையான செயல்களை நான் சிந்திப்பேன்” என்றேன்.

இறைவனே, உமது வழிகள் பரிசுத்தமானவை;

நம்முடைய இறைவனைப்போல் பெரிய தெய்வம் யார்?

அற்புதங்களைச் செய்கிற இறைவன் நீரே;

நீர் மக்கள் மத்தியில் உமது வல்லமையை வெளிப்படுத்துகிறீர்.

உமது வல்லமையுள்ள புயத்தினால்

யாக்கோபு, யோசேப்பு ஆகியோரின் சந்ததியான உமது மக்களை நீர் மீட்டுக்கொண்டீர்.

இறைவனே, சமுத்திரம் உம்மைக் கண்டது,

சமுத்திரம் உம்மைக் கண்டு தத்தளித்தது;

மகா ஆழங்களும் நடுங்கின.

மேகங்கள் தண்ணீரைப் பொழிந்தன,

ஆகாயங்கள் முழங்கி அதிர்ந்தன;

உமது அம்புகள் அங்கும் இங்கும் மின்னிப் பாய்ந்தன.

உமது இடியொலி சுழற்காற்றில் கேட்டது,

உமது மின்னல் உலகத்திற்கு வெளிச்சம் கொடுத்தது;

பூமி நடுங்கி அதிர்ந்தது.

உமது பாதை கடலிலும்,

உமது வழி பெருவெள்ளத்திலும் இருந்தது;

ஆனாலும் உமது அடிச்சுவடுகள் காணப்படவில்லை.

மோசே, ஆரோன் என்பவர்களுடைய கையினால்

நீர் உமது மக்களை ஒரு மந்தையைப்போல் நடத்தினீர்.

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு. Copyright © 2005, 2020, 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.