Skip to content
BibleKenya

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு

சங்கீதம் 75

“அழிக்காதே” என்ற இசையில் வாசிக்கும்படி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் சங்கீதம்.

இறைவனே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்;

உமது பெயர் சமீபமாயிருப்பதால் நாங்கள் நன்றி செலுத்துகிறோம்;

மனிதர் உமது அதிசயமான செயல்களைப்பற்றிக் கூறுகிறார்கள்.

இறைவனோ, “நியமிக்கப்பட்ட காலத்தை நான் தெரிந்துகொண்டு,

நீதியாய் நியாயந்தீர்பேன்.

பூமியும் அதிலுள்ள எல்லா மக்களுடன் கரைந்துபோகின்றது;

நான் அதின் தூண்களை உறுதியாய்ப் பிடித்துக்கொள்வேன்.

அகங்காரம் உள்ளவர்களைப் பார்த்து, ‘இனிமேல் பெருமை பேசாதிருங்கள்’ என்றும்,

கொடியவர்களைப் பார்த்து, ‘உங்கள் கொம்பை உயர்த்தாதிருங்கள்’ என்றும் சொல்கிறார்.

உங்கள் கொம்பை வானங்களுக்கு விரோதமாக உயர்த்தாதிருங்கள்;

தலைக்கனம் உடையவர்களாய்ப் பேசாதிருங்கள் என்றும் சொல்கிறார். ”

கிழக்கிலிருந்தோ, மேற்கிலிருந்தோ,

அல்லது பாலைவனத்திலிருந்தோ உயர்வு வராது.

ஆனால் நியாயந்தீர்க்கிறவர் இறைவனே:

அவர் ஒருவனைத் தாழ்த்தி இன்னொருவனை உயர்த்துகிறார்.

யெகோவாவினுடைய கரத்தில் நியாயத்தீர்ப்பென்னும்

காரசாரமான நுரைக்கின்ற திராட்சை இரசம் நிறைந்த ஒரு கிண்ணம் இருக்கிறது;

அவர் அதை ஊற்றுகிறார்;

பூமியின் கொடியவர்கள் எல்லோரும் அதைக் கடைசிவரைக் குடிக்கிறார்கள்.

நானோ, இதை எக்காலத்திலும் அறிவிப்பேன்;

நான் யாக்கோபின் இறைவனுக்குத் துதி பாடுவேன்.

“கொடியவர்களின் கொம்பாகிய பலத்தை நான் வெட்டிப்போடுவேன்;

ஆனால் நீதிமான்களின் கொம்பாகிய பலத்தை மேலும் உயர்த்துவேன்”

என்று இறைவன் சொல்கிறார்.

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு. Copyright © 2005, 2020, 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.