Skip to content
BibleKenya

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு

சங்கீதம் 69

“லீலிமலர்” என்ற இசையில் பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.

இறைவனே, என்னைக் காப்பாற்றும்;

வெள்ளம் என் கழுத்துமட்டும் வந்துவிட்டது.

கால் ஊன்ற முடியாத சேறு நிறைந்த ஆழங்களில் நான் அமிழ்ந்திருக்கிறேன்;

ஆழமான வெள்ளத்தில்

நான் அகப்பட்டு விட்டேன்;

வெள்ளம் என்னை மூடுகிறது.

சத்தமிட்டுக் கூப்பிட்டு நான் களைத்துப் போனேன்;

என் தொண்டையும் வறண்டுபோயிற்று;

என் இறைவனைத் தேடி

என் கண்கள் மங்கிப்போயின.

காரணம் இல்லாமல் என்னை வெறுக்கிறவர்கள்

என் தலைமுடியைவிட அதிகமாய் இருக்கிறார்கள்;

அநேகர் காரணமில்லாமல் எனக்குப் பகைவர்களாய் இருக்கிறார்கள்;

அவர்கள் என்னை அழிக்கத் தேடுகிறார்கள்.

நான் திருடாததைத் திருப்பிக் கொடுக்க

கட்டாயப்படுத்தப்படுகிறேன்.

இறைவனே, என் புத்தியீனத்தை நீர் அறிந்திருக்கிறீர்;

என் குற்றம் உமக்கு மறைக்கப்பட்டிருக்கவில்லை.

சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவரே,

உமக்காகக் காத்திருக்கிறவர்கள்

என் நிமித்தம் அவமானம் அடையாதிருப்பார்களாக;

இஸ்ரயேலின் இறைவனே,

உம்மைத் தேடுகிறவர்கள்

என் நிமித்தம் வெட்கம் அடையாதிருப்பார்களாக.

உமக்காக நான் நிந்தையை சகித்திருக்கிறேன்;

வெட்கம் என் முகத்தை மூடியிருக்கிறது

நான் என் சகோதரர்களுக்கு வேறுநாட்டைச் சேர்ந்தவனாகவும்

என் சொந்தத் தாயின் மகன்களுக்கு அறியாதவனாகவும் இருக்கிறேன்.

ஏனெனில் உமது ஆலயத்தைப் பற்றிய வைராக்கியம் என்னை எரித்துவிடுகிறது;

உம்மை இகழ்கிறவர்களின் இகழ்ச்சி என்மேல் விழுகிறது.

நான் அழுது உபவாசித்தபோது,

அவர்கள் என்னை நிந்தித்தார்கள்.

நான் துக்கவுடை உடுத்தும் போது,

அவர்களுக்குப் பழமொழியானேன்.

நகர வாசலில் அமர்ந்திருக்கிறவர்கள் என்னைப் பரிகாசம் செய்கிறார்கள்;

நான் குடிகாரரின் பாடலாக இருக்கிறேன்.

ஆனாலும் யெகோவாவே, உம்முடைய தயவின் காலத்திலே,

நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்;

இறைவனே, உமது உடன்படிக்கையின் அன்பினிமித்தம்

நிச்சயமான உமது மீட்பைத் தந்து பதிலளியும்.

சேற்றிலிருந்து என்னைத் தப்புவியும்,

என்னை மூழ்கிப்போக விடாதேயும்;

என்னை வெறுக்கிறவர்களிடம் இருந்தும்

ஆழ்கடலினின்றும் என்னை விடுவியும்.

வெள்ளப்பெருக்கு என்னை மூடிக்கொள்ள விடாதேயும்;

ஆழங்கள் என்னை விழுங்க விடாதேயும்;

சவக்குழி என்மீது தன் வாயை மூடிக்கொள்ள விடாதேயும்.

யெகோவாவே, எனக்குப் பதில் தாரும், உமது உடன்படிக்கையின் அன்பு நல்லது;

உமது பெரிதான இரக்கத்தால் என்னிடம் திரும்பும்.

உமது முகத்தை அடியேனுக்கு மறையாதிரும்,

விரைவாய் எனக்குப் பதில் தாரும்; நான் துயரத்தில் இருக்கிறேன்.

என்னருகே வந்து என்னைத் தப்புவியும்;

என் பகைவரிடமிருந்து என்னை மீட்டுக்கொள்ளும்.

என் நிந்தையும் என் அவமானமும் என் இழிவும் உமக்குத் தெரியும்;

என் பகைவர் எல்லோருமே உமக்கு முன்பாக இருக்கிறார்கள்.

நிந்தை என் உள்ளத்தை நொறுக்கியதால்

நான் களைத்துப் போனேன்.

நான் அனுதாபத்தைத் தேடினேன், அது கிடைக்கவில்லை;

ஆறுதல்படுத்துகிறவர்களைத் தேடினேன், ஆனால் ஒருவரையும் நான் காணவில்லை.

அவர்கள் என் உணவில் கசப்பான நஞ்சைக் கொடுத்தார்கள்;

என் தாகத்துக்குக் குடிக்க எனக்கு காடியைக் கொடுத்தார்கள்.

அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும்

அவர்களுடைய செல்வம் அவர்களுக்குப் பொறியாயும் இருப்பதாக.

அவர்கள் பார்க்க முடியாதபடி அவர்களுடைய கண்கள் இருளடையட்டும்,

அவர்களுடைய முதுகுகள் என்றென்றுமாக கூனிப்போகட்டும்.

உமது கடுங்கோபத்தை அவர்கள்மேல் ஊற்றும்;

உமது சினம் அவர்களைப் பின்தொடர்வதாக.

அவர்களுடைய இருப்பிடங்கள் பாழடைவதாக;

அவர்களுடைய கூடாரங்களில் யாரும் குடியேறாதிருப்பார்களாக.

ஏனெனில் நீர் அடித்தவர்களை அவர்கள் துன்புறுத்தி,

நீர் காயப்படுத்தியவர்களின் வேதனையைக் குறித்து தூற்றிப் பேசுகிறார்கள்.

அவர்களுடைய அநீதியின்மேல் அநீதியை சுமத்தும்;

அவர்கள் உமது இரட்சிப்பில் பங்குபெற இடமளியாதேயும்.

வாழ்வின் புத்தகத்திலிருந்து அவர்கள் நீக்கப்பட்டுப் போவார்களாக;

நீதிமான்களின் பெயர்ப்பட்டியலில் அவர்கள் சேர்க்கப்படாதிருப்பார்களாக.

நான் வருத்தத்திலும் துன்பத்திலும் இருக்கிறேன்;

இறைவனே, உமது இரட்சிப்பு என்னைப் பாதுகாப்பதாக.

நான் இறைவனுடைய பெயரைப் பாட்டினால் துதித்து,

நன்றி செலுத்தி அவரை மகிமைப்படுத்துவேன்.

காணிக்கையாகக் கொடுக்கும்

கொம்பும், விரிகுளம்புமுள்ள காளை எருதைவிட,

மகிமைப்படுத்துவதே யெகோவாவுக்கு அதிக மகிழ்வைக் கொடுக்கும்.

இதைக்கண்டு ஏழைகள் மகிழ்ச்சியடைவார்கள்;

இறைவனைத் தேடுகிறவர்களே, உங்கள் இருதயம் வாழ்வடைவதாக!

யெகோவா தேவையுள்ளோருக்குச் செவிகொடுக்கிறார்;

சிறைப்பட்ட தமது மக்களை அவர் இழிவாகக் கருதுவதில்லை.

வானமும் பூமியும் அவரைத் துதிக்கட்டும்;

கடலும் அவற்றில் வாழும் அனைத்தும் அவரைத் துதிக்கட்டும்.

இறைவன் சீயோனை மீட்டு,

யூதாவின் பட்டணங்களை மீண்டும் கட்டுவார்;

அப்பொழுது அவருடைய மக்கள் அங்கே குடியிருந்து அதை உரிமையாக்கிக்கொள்வார்கள்.

அவருடைய பணியாளரின் பிள்ளைகள் அதை உரிமைச்சொத்தாகப் பெறுவார்கள்;

அவருடைய பெயரை நேசிக்கிறவர்கள் அங்கே குடியிருப்பார்கள்.

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு. Copyright © 2005, 2020, 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.