Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம் 66
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதமாகிய பாட்டு.
பூமியிலுள்ளவர்களே, நீங்கள் எல்லோரும் சந்தோஷத்துடன்
இறைவனை ஆர்ப்பரித்துத் துதியுங்கள்!
அவருடைய பெயரின் மகிமையைப் பாடுங்கள்;
அவருடைய துதியை மகிமையுள்ளதாக்குங்கள்.
இறைவனிடம் சொல்லுங்கள், “உமது செயல்கள் எவ்வளவு பிரமிக்கத்தக்கவை!
உமது வல்லமை பெரிதானது;
அதினால் பகைவர்கள் உமக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள்.
பூமியிலுள்ள அனைவரும் உம்மைப் பணிந்து வழிபடுகிறார்கள்;
அவர்கள் உமக்குத் துதி பாடுகிறார்கள்,
அவர்கள் உமது பெயருக்குத் துதி பாடுகிறார்கள்.”
இறைவன் செய்துள்ளவற்றை வந்து பாருங்கள்;
மனிதரிடையே அவர் செய்யும் செயல்கள் எவ்வளவு பயப்படத்தக்கவை.
அவர் கடலை வறண்ட நிலமாக மாற்றினார்;
மக்கள் கால்நடையாய் தண்ணீரைக் கடந்தார்கள்;
வாருங்கள், அவரில் களிகூருவோம்.
அவர் தமது வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்;
அவருடைய கண்கள் நாடுகளைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றன;
கலகக்காரர் அவருக்கு எதிராக எழும்பாதிருக்கட்டும்.
எல்லா மக்களும், நம்முடைய இறைவனைத் துதியுங்கள்;
அவரைத் துதிக்கும் சத்தம் கேட்கப்படுவதாக.
அவர் நம்முடைய உயிர்களைப் பாதுகாத்திருக்கிறார்;
நம்முடைய பாதங்கள் சறுக்கிவிடாதபடி காத்துக்கொள்கிறார்.
இறைவனே, நீர் எங்களைச் சோதித்துப் பார்த்தீர்;
வெள்ளியைப்போல் எங்களைப் புடமிட்டுச் சுத்திகரித்தீர்.
எங்களைச் சிறைபிடித்து,
எங்கள் முதுகுகளில் பாரங்களை சுமத்தினீர்.
மனிதரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகச் செய்தீர்;
நாங்கள் நெருப்பையும் தண்ணீரையும் கடந்துசென்றோம்,
ஆனால் நீர் எங்களைச் செழிப்பான இடத்திற்கு கொண்டுவந்தீர்.
நான் தகன காணிக்கைகளுடன் உமது ஆலயத்திற்கு வருவேன்;
எனது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவேன்.
நான் துன்பத்திலிருந்தபோது
என் உதடுகளைத் திறந்து, என் வாயினால் சொன்ன நேர்த்திக் கடன்களைச் செய்வேன்.
நான் கொழுத்த மிருகங்களையும்
செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன்;
நான் எருதுகளையும் வெள்ளாடுகளையும் காணிக்கையாகச் செலுத்துவேன்.
இறைவனுக்குப் பயப்படுகிறவர்களே, நீங்கள் எல்லோரும் வந்து, செவிகொடுங்கள்;
அவர் எனக்குச் செய்தவற்றை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
நான் என் வாயினால் அவரைச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்;
அவருடைய துதி என் நாவில் இருந்தது.
என் இருதயத்தில் பாவத்திற்கு இடமளித்திருந்தால்,
யெகோவா எனக்குச் செவிகொடுக்கமாட்டார்;
இறைவனோ நிச்சயமாய் எனக்குச் செவிகொடுத்து,
என் மன்றாட்டின் குரலைக் கேட்டார்.
என் மன்றாட்டைத் தள்ளிவிடாமல்,
என்னிடமிருந்து தமது உடன்படிக்கையின் அன்பை விலக்காமலிருந்த
இறைவனுக்குத் துதி உண்டாகட்டும்.
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு. Copyright © 2005, 2020, 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.