Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம் 30
ஆலய பிரதிஷ்டையின் பாட்டாகிய தாவீதின் சங்கீதம்.
யெகோவாவே, உம்மை நான் புகழ்ந்து உயர்த்துவேன்,
ஏனெனில், ஆழங்களிலிருந்து நீர் என்னை வெளியே தூக்கியெடுத்தீர்;
என் பகைவர் என்னைப் பழித்து மகிழ நீர் இடமளிக்கவில்லை.
என் இறைவனாகிய யெகோவாவே, உதவிவேண்டி உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்;
நீர் என்னை சுகமாக்கினீர்.
யெகோவாவே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து மேலே கொண்டுவந்தீர்;
குழிக்குள் போய்விடாமல் என்னைத் தப்புவித்தீர்.
யெகோவாவினுடைய பரிசுத்தவான்களே, நீங்கள் அவருக்குத் துதி பாடுங்கள்;
அவருடைய பரிசுத்தத்தை நினைத்து நன்றி கூறுங்கள்.
அவருடைய கோபம் ஒரு விநாடி மட்டுமே,
ஆனால் அவருடைய தயவோ வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும்;
இரவிலே அழுகை இருந்தாலும்,
காலையிலோ மகிழ்ச்சி வரும்.
நான் பாதுகாப்பாய் இருக்கிறேன் என எண்ணியபோது,
“நான் ஒருபோதும் அசைக்கப்படமாட்டேன்” என்று சொன்னேன்.
யெகோவாவே, நீர் எனக்குத் தயை காண்பித்தபோது,
என்னுடைய மலையை1 உறுதியாய் நிற்கப்பண்ணினீர்;
ஆனால் நீர் உமது முகத்தை மறைத்துக்கொண்ட போது,
நான் மனம்சோர்ந்து போனேன்.
யெகோவாவே, நான் உம்மையே நோக்கிக் கூப்பிட்டேன்;
யெகோவாவிடம் நான் இரக்கத்திற்காகக் கதறினேன்.
“நான் அழிந்து
குழிக்குள் போவதால் என்ன பயன்?
தூசி உம்மைத் துதிக்குமோ?
அது உமது உண்மையை பிரசித்தப்படுத்துமோ?
யெகோவாவே, எனக்குச் செவிகொடும்; என்மேல் இரக்கமாயிரும்.
யெகோவாவே, எனக்கு உதவியாயிரும்.”
என் கதறலை ஆனந்தக் களிப்பாய் மாற்றினீர்;
நீர் என்னுடைய துக்கவுடையைக் களைந்துவிட்டு,
மகிழ்ச்சியினால் என்னை உடுத்துவித்தீர்.
ஆதலால் என் இருதயம் மவுனமாயிராமல், உமது துதியைப் பாடிக்கொண்டே இருக்கும்;
என் இறைவனாகிய யெகோவாவே, என்றென்றைக்கும் நான் உம்மைத் துதிப்பேன்.
Source notes (1)
- Footnote அதாவது, சீயோன் மலை
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு. Copyright © 2005, 2020, 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.