Skip to content
BibleKenya

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு

சங்கீதம் 109

பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.

இறைவனே, நான் துதிக்கும் இறைவனே,

நீர் மவுனமாய் இருக்கவேண்டாம்.

கொடுமையும், வஞ்சனையும் உள்ளவர்கள்,

தங்கள் வாய்களை எனக்கு விரோதமாகத் திறந்திருக்கிறார்கள்;

பொய் நாவுகளால் எனக்கு விரோதமாகப் பேசுகிறார்கள்.

அவர்கள் பகைமை நிறைந்த சொற்களுடன் என்னைச் சூழ்ந்துகொள்கிறார்கள்;

காரணமின்றி என்னைத் தாக்குகிறார்கள்.

அவர்கள் என் நட்புக்குப் பதிலாக என்னைக் குற்றம் சாட்டுகிறார்கள்,

நானோ மன்றாடும் மனிதனாகவே இருக்கிறேன்.

அவர்கள் நன்மைக்குப் பதிலாக, எனக்குத் தீமை செய்கிறார்கள்;

என் நட்புக்குப் பதிலாக என்னை வெறுக்கிறார்கள்.

என் பகைவனை எதிர்ப்பதற்கு ஒரு தீயவனை ஏற்படுத்தும்;

அவன் வலதுபக்கத்தில் நின்று அவனைக் குற்றஞ்சாட்டுவானாக.

அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாய் காணப்படட்டும்;

அவன் மன்றாட்டுகளும் அவனையே குற்றவாளியாய்த் தீர்ப்பதாக.

அவன் வாழ்நாட்கள் கொஞ்சமாவதாக;

அவனுடைய பதவியை மற்றவர்கள் எடுத்துக்கொள்வார்களாக.

அவன் பிள்ளைகள் தந்தையற்றவர் ஆகட்டும்,

அவன் மனைவி விதவையாகட்டும்.

அவன் பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுக்கட்டும்;

அவர்கள் தங்கள் பாழடைந்த வீடுகளிலிருந்தும் துரத்தப்படுவார்களாக.

கடன் கொடுத்தவன் அவனுக்குரிய எல்லாவற்றையும் பறித்துக் கொள்வானாக;

அவனுடைய பிரயாசத்தின் பலனை பிறர் கொள்ளையிடுவார்களாக.

ஒருவருமே அவனுக்கு தயவுகாட்டாமலும்,

அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்கு அனுதாபப்படாமலும் இருப்பார்களாக.

அவன் சந்ததிகள் மறைந்துபோவார்களாக;

அவன்1 பெயர் அடுத்த தலைமுறையிலிருந்து இல்லாமல் போவதாக.

அவன் முற்பிதாக்களின் அநியாயம் யெகோவாவுக்கு முன்பாக நினைக்கப்படுவதாக;

அவர்களுடைய தாயின் பாவம் ஒருபொழுதும் நீங்காதிருப்பதாக.

ஏனெனில் அவர்களுடைய பாவங்கள் எப்பொழுதுமே

யெகோவாவுக்கு முன்பாக நிலைத்திருக்கட்டும்;

அவர் அவர்களுடைய நினைவையும் பூமியிலிருந்து அகற்றட்டும்.

ஏனெனில் அவன் ஒருபோதும் நன்மை செய்வதைப்பற்றி நினைத்ததில்லை;

மாறாக ஏழைகளையும், எளியவர்களையும்,

உள்ளம் உடைந்தவர்களையும் கொலைசெய்யத் தேடினான்.

சாபம் இடுவதையே அவன் விரும்பினான்;

அவன் இட்ட சாபம் அவன் மேலேயே வருவதாக;

ஆசீர்வதிப்பதை அவன் விரும்பவில்லை,

ஆசீர்வாதம் அவனுக்குத் தூரமாவதாக.

அவன் சாபத்தையே தன் உடையாக அணிந்துகொண்டான்;

அது அவன் உடலுக்குள் தண்ணீரைப்போலவும்,

அவன் எலும்புகளுக்குள் எண்ணெயைப்போலவும் புகுந்தது.

சாபம் அவனைப் போர்த்தும் மேலங்கியைப்போல் இருப்பதாக;

அது அவனைச்சுற்றி கட்டப்பட்ட இடைக்கச்சையைப் போலவும் எப்போதும் இருப்பதாக.

என்னைக் குற்றம் சாட்டுகிறவர்களுக்கும்,

என்னைக்குறித்துத் தீமையாய்ப் பேசுகிறவர்களுக்கும்

இதுவே யெகோவாவினால் கொடுக்கப்படும் தண்டனையாய் இருப்பதாக.

ஆனால், ஆண்டவராகிய யெகோவாவே,

நீர் உமது பெயரினிமித்தம் என்னை நன்றாய் நடத்தும்;

உமது அன்பின் நன்மையினிமித்தம் என்னை விடுவியும்.

ஏனெனில் நான் ஏழையும் எளியவனுமாய் இருக்கிறேன்,

என் இருதயம் எனக்குள் காயப்பட்டிருக்கிறது.

நான் ஒரு மாலை நிழல்போல் மங்கிப்போகிறேன்;

ஒரு வெட்டுக்கிளியைப்போல் உதறிப் போடப்படுகிறேன்.

உபவாசத்தினால் என் முழங்கால்கள் சோர்ந்துபோகின்றன;

என் உடல் மெலிந்து போயிருக்கிறது.

என்னைக் குற்றம் சாட்டுகிறவர்களுக்கு நான் ஓர் இகழ்ச்சிப் பொருளானேன்;

அவர்கள் என்னைப் பார்க்கும்போது, ஏளனமாய் தங்கள் தலைகளை அசைக்கிறார்கள்.

யெகோவாவே, என் இறைவனே, எனக்கு உதவிசெய்யும்;

உமது அன்பின்படியே என்னைக் காப்பாற்றும்.

யெகோவாவே, உமது கரமே அதைச் செய்தது என்றும்,

நீரே அதைச் செய்தீர் என்றும் அவர்கள் அறியட்டும்.

அவர்கள் என்னைச் சபித்தாலும், நீர் என்னை ஆசீர்வதிப்பீர்;

அவர்கள் என்னைத் தாக்கும் வேளையில் அவர்கள் வெட்கத்திற்குட்படுவார்கள்;

ஆனால் உமது அடியானாகிய நான் களிகூருவேன்.

என்னைக் குற்றம் சாட்டுகிறவர்கள் அவமானத்தால் மூடப்படுவார்கள்;

ஓர் அங்கியினால் போர்த்தப்படுவதுபோல் அவர்கள் வெட்கத்தால் போர்த்தப்படுவார்கள்.

நான் யெகோவாவை என் வாயினால் பெரிதும் புகழ்ந்து உயர்த்துவேன்;

பெருங்கூட்டத்தில் நான் அவரைத் துதிப்பேன்.

ஏனெனில் அவர் வறுமைப்பட்டவனுடைய வலதுபக்கத்தில் நிற்கிறார்;

அவனைக் குற்றவாளியாய்த் தீர்ப்பிடுகிறவர்களிடமிருந்து

அவனுடைய உயிரைக் காப்பாற்ற நிற்கிறார்.

Source notes (1)
  1. Footnote அவன் அல்லது அவர்களுடைய

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு. Copyright © 2005, 2020, 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.