Skip to content
BibleKenya

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு

சங்கீதம் 10

யெகோவாவே, நீர் ஏன் தூரத்தில் நிற்கிறீர்?

துன்ப நேரங்களில் நீர் ஏன் மறைந்துகொள்கிறீர்?

கொடுமையானவன் பெருமையினால் பலவீனமானவர்களை வேட்டையாடுகிறான்;

அவன் தீட்டுகிற சதித்திட்டங்களில் அவர்கள் அகப்பட்டுக் கொள்கிறார்கள்.

அவன் தன் இருதயத்தின் பேராசைகளைக் குறித்துப் பெருமைகொள்கிறான்;

அவன் பேராசைக்காரரை வாழ்த்தி யெகோவாவை நிந்திக்கிறான்.

கொடுமையானவன் தன் பெருமையின் நிமித்தம் இறைவனைத் தேடுவதில்லை;

அவனுடைய சிந்தனைகளிலெல்லாம் அவருக்கு இடமேயில்லை.

அவனுடைய வழிகள் எப்பொழுதுமே செழிப்பாயிருக்கின்றன;

உமது நீதிநெறிகளை அவன் ஒதுக்கி வைத்துள்ளான்;

தன் பகைவர் அனைவரையும் ஏளனம் செய்கிறான்.

அவன் தனக்குள்ளே, “என்னை ஒன்றும் அசைக்கப்படுவதில்லை,

எனக்குத் தலைமுறை தலைமுறைதோறும் கஷ்டம் வராது” என்று சொல்லிக்கொள்கிறான்.

அவனுடைய வாய் சாபமும் பொய்யும் கொடுமையும் நிறைந்தது;

அவனுடைய நாவின்கீழே பிரச்சனையும் தீமையும் இருக்கின்றன.

அவன் கிராமங்களின் அருகே பதுங்கிக் காத்திருக்கிறான்;

பதுங்கியிருந்து குற்றமற்றவனைக் கொலைசெய்கிறான்.

திக்கற்றவர்களைப் பிடிப்பதிலேயே கண்ணோக்கமாயிருந்து,

பதுங்கியிருக்கும் சிங்கத்தைப்போல் காத்திருக்கிறான்.

அவன் ஆதரவற்றோரைப் பிடிப்பதற்காக காத்திருக்கிறான்;

அவன் உதவியற்றோரைப் பிடித்து தன் வலையில் இழுத்துக்கொள்கிறான்.

அவனிடம் அகப்பட்டவர்கள் நசுக்கப்பட்டு நிலைகுலைந்து போகிறார்கள்;

அவனுடைய பெலத்தினால் அவர்கள் வீழ்ந்துபோகிறார்கள்.

“இறைவன் கண்டுகொள்ளமாட்டார்;

அவர் தமது முகத்தை மறைத்து, ஒருபோதும் அதைக் காண்பதில்லை”

என்று கொடுமையானவன் தனக்குள் சொல்லிக்கொள்கிறான்.

யெகோவாவே, எழுந்தருளும்; இறைவனே, உமது கரத்தை உயர்த்தும்;

ஆதரவற்றோரை மறவாதிரும்.

கொடுமையானவன் இறைவனை நிந்திப்பது ஏன்?

“அவர் என்னிடம் கணக்குக் கேட்பதில்லை” என்று

அவன் தனக்குள்ளேயே சொல்லிக்கொள்வது ஏன்?

ஆனாலும் இறைவனே, நீரோ பாதிக்கப்பட்டோரின் பிரச்சனையைக் காண்கிறீர்;

நீர் அவர்களின் துயரங்களைக் கவனித்து,

அவர்களுக்கு உதவிசெய்யக் கருத்தாய் இருக்கிறீர்.

பாதிக்கப்பட்டோர்கள் தம்மை உம்மிடம் ஒப்படைக்கிறார்கள்;

திக்கற்றவர்களுக்கு நீரே துணையாய் இருக்கிறீர்.

கொடுமையுள்ள மனிதனின் கரங்களை முறியும்.

தீயவனுடைய கொடுமையைக் குறித்து அவனிடம் கணக்குக் கேளும்.

இல்லையெனில் அதைக் கண்டுபிடிக்க முடியாது.

யெகோவா என்றென்றைக்கும் அரசராயிருக்கிறார்;

அவருடைய நாட்டிலிருந்து பிற மக்கள் அழிந்துபோவார்கள்.

யெகோவாவே, நீர் துன்பப்பட்டோரின் வாஞ்சையைக் கேட்கிறீர்;

அவர்களை உற்சாகப்படுத்தி அவர்களுடைய கதறுதலைக் கேட்கிறார்.

பூமிக்குரிய மனிதன் இனி ஒருபோதும்

மற்றவர்களுக்கு திகிலூட்டுபவனாய் இராதபடி,

நீர் திக்கற்றவர்களையும் ஒடுக்கப்பட்டவர்களையும் பாதுகாக்கிறீர்.

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு. Copyright © 2005, 2020, 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.