Skip to content
BibleKenya

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

சங் 64

இராகத் தலைவனுக்கு தாவீதின் பாடல்.

தேவனே, என்னுடைய விண்ணப்பத்தில் என்னுடைய சத்தத்தைக் கேட்டருளும்;

எதிரியால் வரும் பயத்தை நீக்கி, என்னுடைய உயிரை காத்தருளும்.

துன்மார்க்கர் செய்யும் இரகசிய ஆலோசனைக்கும்,

அக்கிரமக்காரர்களுடைய கலகத்திற்கும் என்னை விலக்கி மறைத்தருளும்.

அவர்கள் தங்களுடைய நாவை வாளைப்போல் கூர்மையாக்கி,

மறைவுகளில் உத்தமன்மேல் எய்வதற்காக கசப்பான வார்த்தைகளாகிய தங்களுடைய அம்புகளை நாணேற்றுகிறார்கள்;

சற்றும் பயமின்றி திடீரென்று அவன்மேல் எய்கிறார்கள்.

அவர்கள் பொல்லாத காரியத்தில் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு,

மறைவான கண்ணிகளை வைக்க ஆலோசனைசெய்து,

அவைகளைக் காண்பவன் யார் என்கிறார்கள்.

அவர்களுடைய நியாயக்கேடுகளை ஆராய்ந்துதேடி,

தந்திரமான யோசனை நிறைவேறும்படி முயற்சி செய்கிறார்கள்;

அவர்களில் ஒவ்வொருவனுடைய உட்கருத்தும் இருதயமும் ஆழமாக இருக்கிறது.

ஆனாலும் தேவன் அவர்கள்மேல் அம்புகளை எய்வார்,

திடீரென்று அவர்கள் காயப்படுவார்கள்.

அவர்கள் தள்ளப்பட்டு, கீழே விழும்படி

அவர்கள் நாவுகளே அவர்களைக் கெடுக்கும்;

அவர்களைக் காண்கிற அனைவரும் ஓடிப்போவார்கள்.

எல்லா மனிதரும் பயந்து, தேவனுடைய செயலை அறிவித்து,

அவர் செய்கையை உணர்ந்துகொள்வார்கள்.

நீதிமான் யெகோவாவுக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான்;

செம்மையான இருதயமுள்ளவர்கள் அனைவரும் மேன்மைபாராட்டுவார்கள்.

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ். Copyright © 2017, 2019 Bridge Connectivity Solutions. Licensed under CC BY-SA 4.0. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.