Skip to content
BibleKenya

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

சங் 115

தாவீதின் பாடல்.

எங்களுக்கு அல்ல, யெகோவாவே, எங்களுக்கு அல்ல,

உமது கிருபையினிமித்தமும் உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய பெயருக்கே மகிமை வரச்செய்யும்.

அவர்களுடைய தேவன் இப்பொழுது எங்கே

என்று தேசங்கள் ஏன் சொல்லவேண்டும்?

நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்;

தமக்குச் சித்தமான அனைத்தையும் செய்கிறார்.

அவர்களுடைய சிலைகள் வெள்ளியும் பொன்னும்,

மனிதர்களுடைய கைவேலையுமாக இருக்கிறது.

அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது;

அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.

அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேட்காது;

அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.

அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது;

அவைகளுக்குக் கால்களிருந்தும் நடக்காது;

தங்களுடைய தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.

அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் அனைவரும்,

அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.

இஸ்ரவேலே, யெகோவாவை நம்பு;

அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார்.

ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவை நம்புங்கள்;

அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார்.

யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களே,

யெகோவாவை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார்.

யெகோவா நம்மை நினைத்திருக்கிறார்,

அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார்,

அவர் ஆரோன் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார்.

யெகோவாவுக்குப் பயப்படுகிற பெரியோர்களையும்,

சிறியோர்களையும் ஆசீர்வதிப்பார்.

யெகோவா உங்களையும் உங்களுடைய பிள்ளைகளையும் பெருகச்செய்வார்.

வானத்தையும் பூமியையும் படைத்த யெகோவாவாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

வானங்கள் யெகோவாவுடையவைகள்;

பூமியையோ மனிதர்களுக்குக் கொடுத்தார்.

இறந்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும்

யெகோவாவை துதிக்கமாட்டார்கள்.

நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும்

யெகோவாவுக்கு நன்றிசொல்லுவோம்.

அல்லேலூயா.

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ். Copyright © 2017, 2019 Bridge Connectivity Solutions. Licensed under CC BY-SA 4.0. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.