Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம் 44
கோராகின் மகன்களிலுள்ள பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மஸ்கீல் என்னும் சங்கீதம்.
இறைவனே, வெகுகாலத்திற்குமுன்
எங்கள் முன்னோர்களின் நாட்களில் நீர் செய்தவற்றை
அவர்கள் எங்களுக்குச் சொன்னார்கள்;
அவற்றை நாங்கள் எங்கள் காதுகளால் கேட்டிருக்கிறோம்.
நீர் உமது கரத்தால் நாடுகளை வெளியே துரத்தி,
எங்கள் முன்னோர்களைக் குடியமர்த்தினீர்;
நீர் அந்நாட்டினரை தண்டித்து,
எங்கள் முன்னோரைச் செழிக்கப் பண்ணினீர்.
அவர்கள் தங்கள் வாளினால் நாட்டை உடைமையாக்கவும் இல்லை,
அவர்களுடைய புயத்தால் அவர்கள் வெற்றிகொள்ளவும் இல்லை;
நீர் அவர்களில் பிரியம் கொள்வதினால் உமது வலதுகரமும் உமது வலிய புயமும்
உமது முகத்தின் ஒளியுமே வெற்றிகொள்ளச் செய்தது.
இறைவனே, நீரே என் அரசன்;
யாக்கோபுக்கு வெற்றியைக் கட்டளையிடுகிறவர் நீரே.
உம்மாலே நாங்கள் எங்கள் பகைவர்களை விழத்தள்ளி,
உமது பெயராலே எங்கள் எதிரிகளை மிதிப்போம்.
என் வில்லிலே நான் நம்பிக்கை வைக்கிறதில்லை,
என் வாள் வெற்றியைக் கொடுப்பதில்லை;
ஆனால் நீரே எங்கள் பகைவர்கள்மீது வெற்றியைக் கொடுத்து,
எங்கள் விரோதிகளை வெட்கப்படுத்துகிறீர்.
நாங்களோ நாள்தோறும் இறைவனிலேயே பெருமை பாராட்டுகிறோம்;
நாங்கள் உமது பெயரை என்றென்றும் துதிப்போம்.
இப்பொழுதோ நீர் எங்களைப் புறக்கணித்து, சிறுமைப்படுத்திவிட்டீர்;
நீர் எங்கள் இராணுவத்துடன் செல்வதுமில்லை.
எங்கள் பகைவருக்கு முன்பாக எங்களைப் பின்வாங்கச் செய்தீர்;
எங்கள் விரோதிகள் எங்களைச் சூறையாடி விட்டார்கள்.
செம்மறியாடுகளைப்போல் நீர் எங்களை இரையாகக் விட்டுக்கொடுத்தீர்;
நாடுகளுக்கு மத்தியில் எங்களைச் சிதறடித்தீர்.
நீர் உமது மக்களை மலிவாக விற்றுப் போட்டீர்;
அவர்களை எவ்வித இலாபமுமின்றி விற்றுப்போட்டீரே.
எங்கள் அயலவருக்கு எங்களை ஒரு நிந்தையாக்கி விட்டீர்;
எங்களைச் சுற்றி இருக்கிறவர்களுக்கு எங்களை இகழ்ச்சியும் ஏளனமும் ஆக்கினீர்.
நீர் எங்களைப் நாடுகளுக்கு நடுவில் ஒரு பழமொழியாக ஆக்கினீர்;
மக்கள் கூட்டம் எங்களைப் பார்த்து ஏளனமாய்த் தங்கள் தலையை அசைக்கிறார்கள்.
நாள்தோறும் நான் அவமானத்தில் வாழ்கிறேன்;
என் முகம் வெட்கத்தினால் மூடப்பட்டிருக்கிறது.
என்னை நிந்தித்துத் தூஷித்து பழிவாங்கத் துடிக்கும்
பகைவர்களின் நிந்தனைகளினாலேயே வெட்கப்படுகிறேன்.
நாங்கள் உம்மை மறவாமல் இருந்தோம்;
உமது உடன்படிக்கைக்கு உண்மையுள்ளவர்களாய் இருந்தோம்;
ஆனாலும், இவையெல்லாம் எங்களுக்கு நடந்தன.
எங்கள் இருதயம் பின்வாங்கவுமில்லை,
எங்கள் பாதங்கள் உமது வழியைவிட்டு விலகவுமில்லை.
ஆனாலும் நீர் எங்களை இடித்து, எங்கள் இடங்களை நரிகளின் உறைவிடமாக்கினீர்;
காரிருளினால் எங்களை மூடினீர்.
எங்கள் இறைவனின் பெயரை நாங்கள் மறந்திருந்தால்,
அல்லது வேறுநாட்டின் தெய்வமல்லாததை நோக்கி எங்கள் கைகளை நீட்டியிருந்தால்,
இறைவன் அதைக் கண்டுபிடியாமல் இருந்திருப்பாரோ?
அவர் இருதயத்தின் இரகசியங்களை அறிகிறவராய் இருக்கிறாரே.
ஆனாலும் உமக்காகவே நாங்கள் நாள்முழுதும் மரணத்தை சந்திக்கிறோம்;
அடித்துக் கொல்லப்பட இருக்கும் செம்மறியாடுகளைப்போல் எண்ணப்படுகிறோம்.
யெகோவாவே, எழுந்தருளும்! ஏன் நித்திரை செய்கிறீர்?
விழித்துக்கொள்ளும்! எங்களை என்றென்றும் புறக்கணியாதேயும்.
நீர் ஏன் உமது முகத்தை மறைத்து,
எங்கள் துன்பத்தையும் நாங்கள் ஒடுக்கப்படுவதையும் மறந்துவிடுகிறீர்?
நாங்கள் தூசியில் தள்ளப்பட்டிருக்கிறோம்;
எங்கள் உடல்கள் தரையோடு ஒட்டியிருக்கிறது.
நீர் எழுந்து எங்களுக்கு உதவிசெய்யும்;
உமது உடன்படிக்கையின் அன்பினால் எங்களை மீட்டுக்கொள்ளும்.
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு. Copyright © 2005, 2020, 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.