Skip to content
BibleKenya

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு

சங்கீதம் 39

பாடகர் குழுத் தலைவனாகிய எதுத்தூனுக்கு ஒப்புவித்த தாவீதின் சங்கீதம்.

நான் சொன்னேன்: “நான் என் வழிகளைக் கவனித்து,

என் நாவைப் பாவத்துக்கு விலக்கிக் காத்துக்கொள்வேன்.

கொடியவர்கள் எனக்குமுன் இருக்கும்வரை,

நான் என் வாயை கடிவாளத்தால் பாதுகாப்பேன்.”

நான் பேசாமல் ஊமையாயிருந்தேன்,

நலமானதையும் பேசாமல் இருந்தேன்.

ஆனால் என் வேதனை அதிகரித்தது;

என் உள்ளம் எனக்குள்ளே அனல் கொண்டது;

நான் தியானிக்கையில், அது நெருப்பாய்ப் பற்றிக்கொண்டது;

அப்பொழுது என் நாவினால் இதைப் பேசினேன்:

“யெகோவாவே, என் வாழ்க்கையின் முடிவையும்,

என் வாழ்நாளின் எண்ணிக்கையையும் எனக்குத் தெரிவியும்;

என் வாழ்வு இவ்வளவுதான் என்பதை எனக்குத் தெரியப்பண்ணும்.

என் வாழ்நாட்களை நான்கு விரலளவாக்கினீர்;

எனது ஆயுட்காலமோ உமக்கு முன்பாக இல்லாததுபோல் தோன்றுகிறது;

பாதுகாப்பாய் இருப்பதுபோல தோன்றும்

எல்லா மனிதரின் நிலையும் கானல்நீரைப் போன்றதே.

“மனிதன் வெறும் மாயையாகவே நடந்து திரிகிறான்;

அவன் ஓடியோடி உழைத்து வீணாகவே அவன் செல்வத்தைச் சேர்த்துக் குவித்தாலும்,

அது யாரைப் போய்ச்சேரும் என அவன் அறியான்.

“ஆனாலும் யெகோவாவே, நான் எதற்காகக் காத்திருக்கிறேன்?

என் எதிர்பார்ப்பு உம்மிலேயே இருக்கிறது.

என் மீறுதல்கள் எல்லாவற்றிலுமிருந்து என்னைக் காப்பாற்றும்;

என்னை மூடரின் கேலிப் பொருளாக்காதேயும்.

நான் மவுனமாயிருந்தேன்;

நீரே இதைச் செய்தவராதலால், நான் என் வாயைத் திறக்கமாட்டேன்.

உமது வாதையை என்னை விட்டகற்றும்;

உமது கரத்தின் தாக்குதலால் நான் இளைத்துப் போனேன்.

பாவத்தினிமித்தம் நீர் மனிதர்களைக் கண்டித்துத் தண்டிக்கும்போது,

நீர் அவர்களுடைய செல்வத்தைப் பூச்சி அரிப்பதுபோல் கரைத்துவிடுகிறீர்;

நிச்சயமாகவே எல்லா மனிதரும் கானல்நீரைப் போன்றவர்களே.

“யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும்;

உதவிகேட்டு நான் கதறும் கதறுதலுக்குச் செவிகொடும்;

என் அழுகையைக் கேளாமல் இருக்கவேண்டாம்.

என் தந்தையர்கள் எல்லோரையும் போலவே,

நானும் உம்முடன் வேறுநாட்டைச் சேர்ந்த ஒருவனாகவும்,

குடியுரிமை அற்றவனாகவும் குடியிருக்கிறேன்.

நான் இவ்விடத்தைவிட்டுப் பிரிந்து இல்லாமல் போகுமுன்னே,

நான் திரும்பவும் மகிழும்படியாய்,

உமது கோபத்தின் பார்வையை என்னைவிட்டு அகற்றும்.”

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு. Copyright © 2005, 2020, 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.