Skip to content
BibleKenya

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு

சங்கீதம் 147

யெகோவாவைத் துதியுங்கள்.

நமது இறைவனுக்குத் துதிகளைப் பாடுவது எவ்வளவு நல்லது,

அவரைத் துதிப்பது எவ்வளவு மகிழ்ச்சியும் தகுதியுமாயிருக்கிறது.

யெகோவா எருசலேமைக் கட்டியெழுப்புகிறார்;

அவர் நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேலரை ஒன்றுசேர்க்கிறார்.

அவர் உள்ளம் உடைந்தவர்களைச் சுகப்படுத்தி,

அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.

அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி,

அவை ஒவ்வொன்றையும் பெயரிட்டு அழைக்கிறார்.

நம்முடைய யெகோவா பெரியவரும், வல்லமை மிகுந்தவருமாய் இருக்கிறார்;

அவருடைய அறிவுக்கு எல்லையே இல்லை.

யெகோவா தாழ்மையுள்ளவர்களை ஆதரிக்கிறார்;

ஆனால் கொடியவர்களையோ தரையில் வீழ்த்துகிறார்.

யெகோவாவை நன்றியுடன் துதி பாடுங்கள்;

யாழினால் நம் இறைவனுக்கு இசை மீட்டுங்கள்.

அவர் ஆகாயத்தை மேகங்களினால் மூடுகிறார்;

பூமிக்கு மழையைக் கொடுத்து,

மலைகளில் புல்லை வளரப்பண்ணுகிறார்.

மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும்

அவர் உணவு கொடுக்கிறார்.

குதிரையின் பலத்தில் அவர் பிரியம் கொள்வதில்லை,

படைவீரனின் கால் வலிமையில் அவர் மகிழ்ச்சி அடைவதுமில்லை;

யெகோவா தமக்குப் பயந்து,

தங்கள் நம்பிக்கையை அவருடைய உடன்படிக்கையின் அன்பில்

வைத்திருக்கிறவர்களில் மகிழ்ச்சியாயிருக்கிறார்.

எருசலேமே யெகோவாவைப் பாராட்டு;

சீயோனே உன் இறைவனைத் துதி.

ஏனெனில் அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி,

உன்னிடத்திலுள்ள உன் மக்களை ஆசீர்வதிக்கிறார்.

அவர் உன் எல்லைகளுக்குச் சமாதானத்தைக் கொடுத்து,

சிறந்த கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.

அவர் பூமிக்குத் தமது கட்டளையை அனுப்புகிறார்;

அவருடைய வார்த்தை விரைந்து செல்கிறது.

அவர் மூடுபனியை கம்பளியைப்போல் பரப்புகிறார்;

உறைபனித் துகள்களை சாம்பலைப்போல் தூவுகிறார்.

அவர் தமது பனிக்கட்டி மழையை சிறு கற்களைப்போல் வீசியெறிகிறார்;

அவருடைய பனியின் குளிர்காற்றை யாரால் தாங்கமுடியும்?

அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகச்செய்கிறார்;

அவர் தமது தென்றல் காற்றுகளை வீசச்செய்ய, வெள்ளம் ஓடுகிறது.

அவர் தமது வார்த்தையை யாக்கோபுக்கும்,

தமது சட்டங்களையும் விதிமுறைகளையும் இஸ்ரயேலுக்கும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அவர் இப்படி வேறு எந்த மக்களுக்கும் வெளிப்படுத்தவில்லை;

அவர்கள் அவருடைய சட்டங்களை அறியாதிருக்கிறார்கள்.

யெகோவாவைத் துதி.

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு. Copyright © 2005, 2020, 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.