Skip to content
BibleKenya

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

சங் 38

நினைவுகூருதலுக்கான தாவீதின் பாடல்.

யெகோவாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ள வேண்டாம்;

உம்முடைய கடுங்கோபத்தில் என்னைத் தண்டிக்க வேண்டாம்.

உம்முடைய அம்புகள் எனக்குள்ளே துளைத்திருக்கிறது;

உமது கை என்னைத் தாங்குகிறது.

உமது கோபத்தினால் என் உடலில் ஆரோக்கியமில்லை;

என் பாவத்தினால் என் எலும்புகளில் சுகமில்லை.

என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகினது,

அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கமுடியாத பாரமானது.

என் மதியீனத்தினால் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.

நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள் முழுவதும் துக்கப்பட்டுத் திரிகிறேன்.

என் குடல்கள் எரிபந்தமாக எரிகிறது;

என் உடலில் ஆரோக்கியம் இல்லை.

நான் பெலன் இழந்து, மிகவும் நொறுக்கப்பட்டேன்;

என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன்.

ஆண்டவரே, என் ஏக்கமெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது;

என் தவிப்பு உமக்கு மறைவாக இருக்கவில்லை.

என் உள்ளம் குழம்பி அலைகிறது;

என் பெலன் என்னைவிட்டு விலகி, என் கண்களின் ஒளி கூட இல்லாமல்போனது.

என் நண்பர்களும் என் தோழர்களும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்;

என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள்.

என் உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்;

எனக்குத் தீங்கை தேடுகிறவர்கள் கேடானவைகளைப் பேசி,

நாள்முழுவதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள்.

நானோ செவிடனைப்போலக் கேட்காதவனாகவும்,

ஊமையனைப்போல வாய் திறக்காதவனாகவும் இருக்கிறேன்.

காதுகேட்காதவனும், தன்னுடைய வாயில் பதில் இல்லாதவனுமாக இருக்கிற மனிதனைப் போலானேன்.

யெகோவாவே, உமக்குக் காத்திருக்கிறேன்;

என் தேவனாகிய ஆண்டவரே, நீர் பதில் கொடுப்பீர்.

அவர்கள் எனக்காக சந்தோஷப்படாதபடிக்கு இப்படிச் சொன்னேன்;

என்னுடைய கால் தவறும்போது என்மேல் பெருமை பாராட்டுவார்களே.

நான் தடுமாறி விழ ஏதுவாக இருக்கிறேன்;

என்னுடைய துக்கம் எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது.

என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு,

என் பாவத்திற்காக கவலைப்படுகிறேன்.

என் எதிரிகள் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள்;

காரணமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் பெருகியிருக்கிறார்கள்.

நான் நன்மையைப் பின்பற்றுகிறபடியால்,

நன்மைக்குத் தீமை செய்கிறவர்கள் என்னை விரோதிக்கிறார்கள்.

யெகோவாவே, என்னைக் கைவிடாமலிரும்;

என் தேவனே, எனக்குத் தூரமாக இருக்கவேண்டாம்.

என்னுடைய இரட்சிப்பாகிய ஆண்டவரே,

எனக்குச் உதவிசெய்ய விரைவாகவாரும்.

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ். Copyright © 2017, 2019 Bridge Connectivity Solutions. Licensed under CC BY-SA 4.0. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.