Skip to content
BibleKenya

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

சங் 25

தாவீதின் பாடல்.

யெகோவாவே, உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன்.

என் தேவனே, உம்மை நம்பி இருக்கிறேன்,

நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்;

என்னுடைய எதிரிகள் என்னை மேற்கொண்டு மகிழவிடாமலிரும்.

உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்;

காரணமில்லாமல் துரோகம்செய்கிறவர்களே வெட்கப்பட்டுப் போவார்களாக.

யெகோவாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்;

உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்.

உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்;

நீரே என்னுடைய இரட்சிப்பின் தேவன்,

உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்.

யெகோவாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய கருணையையும் நினைத்தருளும்,

அவை தொடக்கமில்லா காலம் முதல் இருக்கின்றது.

என்னுடைய இளவயதின் பாவங்களையும் என்னுடைய மீறுதல்களையும் நினைக்காமலிரும்;

யெகோவாவே, உம்முடைய தயவிற்காக என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும்.

யெகோவா நல்லவரும் உத்தமருமாக இருக்கிறார்;

ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்.

சாந்த குணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி,

சாந்த குணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்.

யெகோவாவுடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு,

அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவை.

யெகோவாவே, என்னுடைய அக்கிரமம் பெரிது;

உம்முடைய பெயரினால் அதை மன்னித்தருளும்.

யெகோவாவுக்குப் பயப்படுகிற மனிதன் எவனோ

அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்.

அவனுடைய ஆத்துமா நன்மையில் தங்கும்;

அவன் சந்ததி பூமியைச் சொந்தமாக்கிக்கொள்ளும்.

யெகோவாவுடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது;

அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்.

என்னுடைய கண்கள் எப்போதும் யெகோவாவை நோக்கிக்கொண்டிருக்கின்றன;

அவரே என்னுடைய கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார்.

என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்;

நான் தனித்தவனும், பாதிக்கப்பட்டவனுமாக இருக்கிறேன்.

என்னுடைய இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கின்றன;

என்னுடைய பிரச்சனைகளிலிருந்து என்னை நீங்கலாக்கிவிடும்.

என்னுடைய பாதிப்பையையும் என்னுடைய துன்பத்தையும் பார்த்து,

என்னுடைய பாவங்களையெல்லாம் மன்னித்தருளும்.

என்னுடைய எதிரிகளைப் பாரும்;

அவர்கள் பெருகியிருந்து, கொடூர வெறுப்பாய் என்னை வெறுக்கிறார்கள்.

என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்;

நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; உம்மிடம் அடைக்கலம் வந்துள்ளேன்.

உத்தமமும், நேர்மையும் என்னைக் காக்கட்டும்;

நான் உமக்குக் காத்திருக்கிறேன்.

தேவனே, இஸ்ரவேலை அவனுடைய எல்லாப் பிரச்சனைகளுக்கும் விடுவித்து மீட்டுவிடும்.

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ். Copyright © 2017, 2019 Bridge Connectivity Solutions. Licensed under CC BY-SA 4.0. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.