இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்
ஆதி 11
பாபேல் கோபுரம்
பூமியெங்கும் ஒரே மொழியும், ஒரே விதமான பேச்சும் இருந்தது. மக்கள் கிழக்கேயிருந்து பயணம்செய்யும்போது, சிநெயார்1 தேசத்தில் சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள். அப்பொழுது அவர்கள்: “நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாகச் சுடுவோம் வாருங்கள்” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்; கல்லுக்குப் பதிலாக செங்கலும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது. பின்னும் அவர்கள்: “நாம் பூமியெங்கும் சிதறிப்போகாதபடி, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தைத் தொடுமளவு ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பெயர் உண்டாகச் செய்வோம் வாருங்கள்” என்று சொல்லிக்கொண்டார்கள். மனிதர்கள் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் யெகோவா இறங்கினார். அப்பொழுது யெகோவா: “இதோ, மக்கள் ஒரே கூட்டமாக இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே மொழியும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத்தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது என்று இருக்கிறார்கள். நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் புரிந்துகொள்ளாதபடி, அங்கே அவர்கள் மொழியைத் தாறுமாறாக்குவோம்” என்றார். அப்படியே யெகோவா அவர்களை அந்த இடத்திலிருந்து பூமியெங்கும் சிதறிப்போகச் செய்தார்; அப்பொழுது நகரம் கட்டுவதை விட்டுவிட்டார்கள். பூமியெங்கும் பேசப்பட்ட மொழியைக் யெகோவா அந்த இடத்தில் தாறுமாறாக்கியதால், அதின் பெயர் பாபேல்2 எனப்பட்டது; யெகோவா அவர்களை அந்த இடத்திலிருந்து பூமியெங்கும் சிதறிப்போகச் செய்தார்.
சேமுடைய வம்சவரலாறு
சேமுடைய வம்சவரலாறு: வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 வருடங்களுக்குப் பிறகு, சேம் 100 வயதானபோது, அர்பக்சாத்தைப் பெற்றெடுத்தான். சேம் அர்பக்சாத்தைப் பெற்றபின் 500 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். அர்பக்சாத் 35 வயதானபோது சாலாவைப் பெற்றெடுத்தான். சாலாவைப் பெற்றபின் அர்பக்சாத் 403 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். சாலா 30 வயதானபோது ஏபேரைப் பெற்றெடுத்தான். ஏபேரைப் பெற்றபின் சாலா 403 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். ஏபேர் 34 வயதானபோது பேலேகைப் பெற்றெடுத்தான். பேலேகைப் பெற்றபின் ஏபேர் 430 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். பேலேகு 30 வயதானபோது ரெகூவைப் பெற்றெடுத்தான். ரெகூவைப் பெற்றபின் பேலேகு 209 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். ரெகூ 32 வயதானபோது செரூகைப் பெற்றெடுத்தான். செரூகைப் பெற்றபின் ரெகூ 207 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். செரூகு முப்பது 30 நாகோரைப் பெற்றெடுத்தான். நாகோரைப் பெற்றபின் செரூகு 200 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். நாகோர் 29 வயதானபோது தேராகைப் பெற்றெடுத்தான். தேராகைப் பெற்றபின் நாகோர் 119 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். 70 வயதானபோது ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றெடுத்தான்.
தேராகுடைய வம்சவரலாறு
தேராகுடைய வம்சவரலாறு: தேராகு ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றெடுத்தான்; ஆரான் லோத்தைப் பெற்றெடுத்தான். ஆரான் தன் பிறந்த இடமாகிய ஊர் என்கிற கல்தேயர் தேசத்துப் பட்டணத்திலே தன் தகப்பனாகிய தேராகு இறப்பதற்குமுன்னே இறந்தான். ஆபிராமும் நாகோரும் திருமணம் செய்தார்கள்; ஆபிராமுடைய மனைவிக்கு சாராய் என்று பெயர்; நாகோருடைய மனைவிக்கு மில்க்காள் என்று பெயர்; இவள் ஆரானுடைய மகள்; அந்த ஆரான் மில்க்காளுக்கும் இஸ்காளுக்கும் தகப்பன். சாராய்க்குக் குழந்தையில்லை; மலடியாக இருந்தாள். தேராகு தன் மகனாகிய ஆபிராமையும், ஆரானுடைய மகனும், தன்னுடைய பேரனுமாயிருந்த லோத்தையும், ஆபிராமுடைய மனைவியாகிய தன்னுடைய மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு, அவர்களுடன் ஊர் என்கிற கல்தேயர்களுடைய பட்டணத்தைவிட்டு, கானான் தேசத்திற்குப் போகப் புறப்பட்டான்; அவர்கள் ஆரான்வரைக்கும் வந்தபோது, அங்கே தங்கிவிட்டார்கள். தேராகுடைய ஆயுசு நாட்கள் 205 வருடங்கள்; தேராகு ஆரானிலே இறந்தான்.
Source notes (2)
- Footnote பாபிலோன்
- Footnote பாபிலோன்
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ். Copyright © 2017, 2019 Bridge Connectivity Solutions. Licensed under CC BY-SA 4.0. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.