Skip to content
BibleKenya

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

சங் 21

இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.

யெகோவாவே, உம்முடைய வல்லமையிலே இராஜா மகிழ்ச்சியாக இருக்கிறார்;

உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாகச் சந்தோஷப்படுகிறார்!

அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி,

அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாமலிருக்கிறீர். (சேலா)

உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து,

அவர் தலையில் பொற்கிரீடம் அணிவிக்கிறீர்.

அவர் உம்மிடத்தில் ஆயுளைக்கேட்டார்;

நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள நீடித்த ஆயுளை அளித்தீர்.

உமது இரட்சிப்பினால் அவர் மகிமை பெரிதாக இருக்கிறது;

மேன்மையையும் மகத்துவத்தையும் அவருக்கு கொடுத்தீர்.

அவர் நீடித்த ஆசீர்வாதங்களை அவர்களுக்கு கொடுக்கிறார்;

அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர்.

ஏனெனில் இராஜா யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறார்;

உன்னதமான தேவனுடைய தயவினால் அசைக்கப்படாமல் இருப்பார்.

உமது கை உமது எதிரிகள் எல்லோரையும் எட்டிப்பிடிக்கும்;

உமது வலதுகரம் உம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும்.

உமது கோபத்தின் காலத்திலே

அவர்களை நெருப்புச் சூளையாக்கிப்போடுவீர்;

யெகோவா தமது கோபத்திலே அவர்களை அழிப்பார்;

நெருப்பு அவர்களை அழிக்கும்.

அவர்கள் பிள்ளைகளை பூமியிலிருந்தும்

அவர்கள் சந்ததியை மனுமக்களிலிருந்தும் அழிப்பீர்.

அவர்கள் உமக்கு விரோதமாக தீங்கு நினைத்தார்கள்;

தீவினை செய்ய முயன்றார்கள்;

ஒன்றும் வாய்க்காமல்போனது.

உம்முடைய அம்புகளை நாணேற்றி அவர்கள் முகத்திற்கு நேரே எய்து அவர்களைத் திரும்பி ஓடச்செய்கிறீர்.

யெகோவாவே, உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும்;

அப்பொழுது உம்முடைய வல்லமையைப் பாடித் துதிப்போம்.

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ். Copyright © 2017, 2019 Bridge Connectivity Solutions. Licensed under CC BY-SA 4.0. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.