Skip to content
BibleKenya

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

நீதி 29

ஞானத்தின் போதனை

அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன்னுடைய பிடரியைக் கடினப்படுத்துகிறவன்

உதவியின்றி திடீரென்று நாசமடைவான்.

நீதிமான்கள் பெருகினால் மக்கள் மகிழுவார்கள்;

துன்மார்க்கர்கள் ஆளும்போதோ மக்கள் தவிப்பார்கள்.

ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன்னுடைய தகப்பனை

சந்தோஷப்படுத்துகிறான்; வேசிகளோடு தொடர்புள்ளவனோ சொத்தை அழிக்கிறான்.

நியாயத்தினால் ராஜா தேசத்தை நிலைநிறுத்துகிறான்;

லஞ்சப்பிரியனோ அதைக் தலைகீழாக்குகிறான்.

பிறனை முகஸ்துதி செய்கிறவன்,

அவனுடைய கால்களுக்கு வலையை விரிக்கிறான்.

துன்மார்க்கனுடைய துரோகத்திலே கண்ணி இருக்கிறது;

நீதிமானோ பாடி மகிழுகிறான்.

நீதிமான் ஏழைகளின் நியாயத்தைக் கவனித்து அறிகிறான்;

துன்மார்க்கனோ அதை அறிய விரும்பமாட்டான்.

பரியாசக்காரர்கள் பட்டணத்தில் தீக்கொளுத்திவிடுகிறார்கள்;

ஞானிகளோ கோபத்தை விலக்குகிறார்கள்.

ஞானி மூடனுடன் வழக்காடும்போது,

கோபப்பட்டாலும் சிரித்தாலும் அமைதியில்லை.

இரத்தப்பிரியர்கள் உத்தமனைப் பகைக்கிறார்கள்;

செம்மையானவர்களோ அவனுடைய உயிரைக் காப்பாற்றுகிறார்கள்.

மூடன் தன்னுடைய உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்;

ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான்.

அதிபதியானவன் பொய்களுக்குச் செவிகொடுத்தால்,

அவனுடைய அலுவலர்கள் எல்லோரும் துன்மார்க்கர்களாவார்கள்.

தரித்திரனும் கொடுமைக்காரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்;

அந்த இருவருடைய கண்களுக்கும் யெகோவா வெளிச்சம் கொடுக்கிறார்.

ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாக விசாரிக்கிற ராஜாவின் சிங்காசனம்

என்றும் நிலைபெற்றிருக்கும்.

பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்;

தன்னுடைய இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ

தன்னுடைய தாய்க்கு வெட்கத்தை உண்டாக்குகிறான்.

துன்மார்க்கர்கள் பெருகினால் பாவமும் பெருகும்;

நீதிமான்களோ அவர்கள் விழுவதைக் காண்பார்கள்.

உன்னுடைய மகனை தண்டி, அவன் உனக்கு ஆறுதல் செய்வான்,

உன்னுடைய ஆத்துமாவிற்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்.

தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் மக்கள் சீர்கெட்டுப்போவார்கள்;

வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்.

அடிமையானவன் வார்த்தைகளினாலே அடங்கமாட்டான்;

அவைகளை அவன் அறிந்தாலும் உத்திரவு கொடுக்கமாட்டான்.

தன்னுடைய வார்த்தைகளில் பதறுகிற மனிதனைக் கண்டால்,

அவனை நம்புவதைவிட மூடனை நம்பலாம்.

ஒருவன் தன்னுடைய அடிமையைச் சிறு வயதுமுதல் அவனது இஷ்டப்படி வளர்த்தால்,

முடிவிலே அவன் தன்னை மகனாக உரிமைபாராட்டுவான்.

கோபக்காரன் வழக்கை உண்டாக்குகிறான்;

கடுங்கோபி பெரும்பாதகன்.

மனிதனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்;

மனத்தாழ்மையுள்ளவனோ மதிப்படைவான்.

திருடனோடு பங்கிட்டுக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவைப் பகைக்கிறான்;

சாபத்தை அவன் கேட்டாலும் காரியத்தை வெளிப்படுத்தமாட்டான்.

மனிதனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்;

யெகோவாவை நம்புகிறவனோ

உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.

ஆளுகை செய்கிறவனுடைய முகதரிசனத்தைத் தேடுகிறவர்கள் அநேகர்;

ஆனாலும் அவனவனுடைய நியாயம் யெகோவாவாலே தீரும்.

நீதிமானுக்கு அநியாயக்காரன் அருவருப்பானவன்;

சன்மார்க்கனும் துன்மார்க்கனுக்கு அருவருப்பானவன்.

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ். Copyright © 2017, 2019 Bridge Connectivity Solutions. Licensed under CC BY-SA 4.0. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.